LKYFB Tamil Preschool Big Books
(In the process of being translated into other languages)
5 Preschool Tamil Big Books funded by LKYFB has been published and is now for sale. The synopses of the books are given below. Please email me at cshegar@thereadingedgeacademy.com to purchase the books and for further inquiries.
எனக்குப் பிடித்த நகை
சங்கரியும் அவளது சகோதரி மாலதியும் திருமணத்திற்குச் செல்லத் தயாரானார்கள். அம்மா இருவரையும் அலங்காரம் செய்ய அழைத்தார். ஆனால், சங்கரி விளையாடுவதில் மும்முரமாக இருந்ததால் அலங்காரம் வேண்டாம் என்று கூறிவிட்டாள். அம்மா மாலதியை அலங்கரிக்கிறார். அந்த அழகிய அலங்காரத்தைக் கண்ட சங்கரி அழுதுகொண்டு தன்னையும் அவ்வாறு அலங்கரிக்கக் கேட்டாள். ஆகையால், அம்மா அவளையும் அலங்கரித்தார். திருமணத்தில், ஒரு சிறுமி சங்கரி அணிந்திருந்த பாவாடையின் அழகைப் பாராட்டினாள். ஆனால், சிறுமியின் வார்த்தைகளைவிட, அவள் அணிந்திருந்த கொலுசின் ஒலியே சங்கரியின் செவிகளில் ஒலித்தது. அப்போதுதான் தன் கொலுசை அணிய வேண்டும் என்று அவளுக்கு ஞாபகம் வந்தது. மண்டபத்தில் நடந்து செல்லும்போது, சங்கரியின் கால் கொலுசு இனிமையான சத்தத்தை எழுப்பியது. அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். புகைப்படக்காரர் சங்கரியைப் பல படங்கள் எடுத்தார். மறுநாள், அவர் சங்கரியின் அம்மாவைத் தொலைபேசியில் அழைத்தார். பாரம்பரிய உடையில் இருக்கும் சங்கரியின் புகைப்படங்களைத் தேசியதினக் கொண்டாட்ட விளம்பரங்களில் பயன்படுத்த அனுமதி கேட்டார். அதைக் கேட்ட சங்கரி தன் அறைக்குச் சென்று அவளுடைய கொலுசைப் பெருமையுடன் முத்தமிட்டாள். பாரம்பரிய ஆடை அணிகளின் முக்கியத்துவத்தை அவள் அறிந்துகொண்டாள்.
உன்னால் முடியும்
மாலதியின் தந்தை ஒரு தையற்காரர். அன்று மாலதி தையல் இயந்திரத்திற்கு அருகில் பலவித அலங்காரப்பொருள்கள், நிறைய மயில் இறகுகள் முதலியவை இருப்பதைக் கண்டாள். அவளுடைய தந்தை, பொங்கல் பண்டிகையையொட்டி நிகழ்த்தப்படும் மயிலாட்டத்திற்காக ஆடைகளைத் தைத்துக்கொண்டிருந்தார்.
இந்த ஒரு நிகழ்வுக்காக மட்டும் ஏராளமான மயில்கள் சித்திரவதை செய்யப்படுமே என்று மாலதி கலங்கினாள். அவள் தந்தையிடம் மயில் இறகுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினாள். அவளது தந்தை மயில் இறகுகள் தானாகவே உதிர்ந்துவிடும் என்ற தகவலை விளக்கிய பின்னர்தான், மாலதி நிம்மதி அடைந்தாள். மாலதியும் அவள் தந்தையும் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு பற்றி உரையாடினார்கள். பிறகு, அவர்கள் இருவரும் மறுபயன்பாட்டைக் கருத்தில் கொண்டு மாலதியின் தம்பியின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.
பாலன் தன் ஆசிரியரின் மேசையில் பல செடிகள் இருப்பதைப் பார்த்தான்.
ஆசிரியர் மரம் நடவேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கலந்துரையாடல் நடத்திய பிறகு, ஒவ்வொருவருக்கும் ஒரு செடியைக் கொடுத்துத் தோட்டத்தில் வளர்க்கச் சொன்னார். ஆனால், கொடுக்கப்பட்டுள்ள செடி எவ்வகையானது என்பதை மாணவர்களிடம் அவர் கூறவில்லை. மாணவர்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கவனித்து வந்தார்கள். ஆனால், பாலனைத் தவிர, மற்ற எல்லா மாணவர்களின் செடிகளிலும் காய்கள் காய்த்திருந்தன.
ஆசிரியர் தொட்டியிலிருந்த மண்ணைத் தோண்டச் சொன்னார். அவன், மண்ணுக்குள் செடியின் வேரில் நிறைய வேர்க்கடலைகள் இருப்பதைப் பார்த்து அவனும் மற்ற மாணவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.
திரும்பி வந்த குருவிகள்
மாறன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். புதரின் மேல் இருந்த ஒரு கூடு அவன் கவனத்தை ஈர்த்தது. அருகில் சென்று பார்த்தபோது அது ஒரு குருவிக் கூடு என்பதையும் அதில் மூன்று முட்டைகள் இருப்பதையும் அறிந்தான். மாறன் அதைத் தினமும் கண்காணித்து வந்தான். அந்தப் பறவைகள் ஓர் அரிய வகையைச் சேர்ந்தவை ( black-naped monarch bird). பறவைகளைக் கூண்டில் வைத்து ரசிக்க மாறன் ஆசைப்பட்டாலும் , அவன் அவற்றைச் சுதந்திரமாக இருக்கவிட்டான். பறவைக்குஞ்சுகள் எவ்வாறு முட்டையிலிருந்து வெளிவந்து தம் முயற்சியால் படிப்படியாகப் பறக்கக் கற்றுக்கொள்கின்றன என்பதை மாறன் தினந்தோறும் கவனித்து வந்தான். ஒரு நாள், அந்த அரிய வகை பறவைகளைக் காணவில்லை. ஆகையால், மாறன் கவலையுடன் இருந்தான். அவன் தந்தை அதைக் கவனித்தார். அவனை உற்சாகப்படுத்தச் செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர்கள் குருவி வீடு ஒன்றை வாங்கினார்கள். மாறன் அதில் தண்ணீரையும் இரையையும் நிரப்பினான். பலவகையான பறவைகள் இரையைக் கொத்தித் தின்னவும், தண்ணீரை அருந்தவும் அங்கு வந்து செல்வதை மாறன் ரசித்தான். ஒரு நாள், அந்த அரிய வகை பறவைகள் மீண்டும் அந்தத் தோட்டதிற்குப் பறந்து வந்தன. இயற்கைக்கு எந்தவோர் இடையூறையும் விளைவிக்காமல் அதை ரசிக்கலாம் என்று மாறன் உணர்ந்தான்.